
நான் என்ன பைத்தியமா?
- மனநல மருத்துவர் ஆனந்தன்

- Dec 10, 2024
- 6 min read
ஒருவரின்
"நடத்தையில் பிரச்சனைகள்(Behavioural Problems) இருந்தால் மட்டுமே மனநல மருத்துவரிடம் ஆலோசனைப் பெறவேண்டும்,"
என்ற போக்கு மெத்தப் படித்தவர்கள் மற்றும் பெரும்பாலான மருத்துவ நிபுணர்களுக்கே கூட தொடர்ந்து நிலவி வருகிறது.
ஆகையினால் நம் அன்புக்குரியவர்களுக்கு மனநல சிகிச்சைத் தேவைப்படும் பட்சத்தில்...,
“நல்லாத்தானே இருக்கான், திமிரு, இவனா பைத்தியம்;நாம எல்லாரையும் பைத்தியக்காரனா ஆக்கிவிடுவான்,”
என சொல்லி கொண்டு, எங்கே நம் அன்புக்குரியவர்களுக்கு மனநோயாளி பட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயத்தில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.
நடத்தையில் ஏற்படும் பிரச்சனைகள் பாதிக்கப்பட்டவரைவிட பராமரிப்பவர்களைத்தான் (Care Givers) மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். நமது நாட்டில் பெரும்பாலும் குடும்பத்தினர் தான் பராமரிப்பவர்களாக இருக்க வேண்டிய நிலை.
வளர்ந்த நாடுகளில், இந்தப் பராமரிப்பு பணியை ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கம் மற்றும் சமூகமே பார்த்து கொள்ளும்.
நம் நாட்டில், ஒரு வீட்டில் தீவிரமான நடத்தைக் கோளாறு உடைய ஒருவர் இருந்தால், அந்த ஒட்டு மொத்த குடும்பமுமே சூன்யமாகி விடுகிற அவலத்தை அன்றாடம் பார்க்கிறேன்.
தீவிரமான நடத்தைக் கோளாறுகள் என்பது, பொதுவாக கீழ்காணும் நோய்களில் தான் வரும்.
1. மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் (Neurodevelopmental disorders). உதாரணமாக ஆட்டிஸம்(Autism), அறிவுக்கூர்மையில் குறைபாடுகள் (impaired intelligence) இன்னும் சில. இவை பெரும்பாலும் தாயின் கருவிலேயோ அல்லது தாயின் வயிற்றிலிருந்து குழந்தை வெளியில் வரும்போது ஏற்படும் சிக்கல்களாலோ வரும்.
2. நன்றாக இருப்பவர்களுக்கு விபத்து அல்லது மூளைக்காய்ச்சல் போன்ற காரணங்களால் மூளையின் செயல் பாதிக்கப்படுவதால் ஏற்படும் குண மாற்றம் மற்றும் நடத்தை கோளாறுகள் (Post-traumatic Personality change and behaviour problems).
3. சந்தேக மனச்சிதைவு மற்றும் மனப்பிறழ்வு நோய்கள் (paranoid schizophrenia & delusional disorders).
4. பைபோலார் மூட் டிஸாடர்(BPMD-type1).
5. வளர்ந்த மூளை செல்கள் சிதைவதால் ஏற்படும் நோய்கள்(Neurodegenerative disorders). அல்சீமர் டிமென்ஷியா நோய், ஸ்ட்ரோக் போன்ற நோய்களின் விளைவாக மூளை செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய்கள், இன்னும் பல…. (Alzheimer's disease, Vascular Dementia etc etc)
பைபோலார் நோயில்(In type 1 bipolar disorder), வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ‘மேனியா’ எனப்படும் மன எழுச்சி பெரும் சூறாவளியைப் போல தாக்கி அந்தக் குடும்பத்தையே ஒரு உலுக்குக் உலுக்கி எடுத்து விட்டு, பிறகு அமைதியாகிவிடும்.
பைபோலார் நோயை 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேனிக் டிப்ரெஸிவ் சைகோசிஸ் (Manic-depressive psychosis) என அழைப்பார்கள்.
பைபோலார் நோயில் இரண்டாவது வகை இருக்கிறது (Bipolar mood disorder - type 2). அதன் வெளிப்பாடுகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக தோன்றும்படி இருக்காது. மாறாக பெரும்பாலும் பாதிக்கப்பட்டவரை தாங்கவொனா உள்ள உழைச்சலுக்கு உள்ளாக்கும் மிகக் கொடுமையான நோய்.
என் உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் இந்த நோய்க்குறித்து ஒரு பெரிய கட்டுரை நூல் எழுத, இந்த நோயை மையமாக வைத்து சில நாவல்கள் எழுத, சில திரைப்படங்கள் இயக்க உள்ள திட்டம் நிறைவேற கூடும்.
1, 2, 3, 4, 5 என வரிசைப்படுத்தி எழுதி இருப்பவை, பெரும்பாலான நேரங்களில் பாதிக்கப்பட்டவரை விட உடன் இருப்பவர்களுக்கு மன உளைச்சல்களை கொடுக்கும் மன நோய்கள் ஆகும்.
இவை தவிர நூற்றுக்கணக்கான மிதமான மன நோய்கள் இருக்கின்றன. அந்த மனநோய்கள், இந்தக் கணத்தில் இதைப் படித்து கொண்டிருக்கும் மனிதர்கள் பலருக்கும் இருக்கும்.
இந்த மிதமான மன உளைச்சல்களில் எண்ணங்கள் (Thoughts), உணர்ச்சிகள்(Emotions), மனோநிலை(Mood state) மற்றும் புறத்தூண்டல்களால் அல்லது தூண்டப்படாமலேகூட புலன்களை வந்தடையும் பிரத்யேக உணர்வுகள் (Perceptions) ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படும்.
நடத்தையில் பிரச்சனைகள் இருந்தால் மட்டும் தானே வெளியில் உள்ளவர்களுக்கு தெரியும்.
மாறாக எண்ணங்கள் உணர்ச்சிகள் மற்றும் மனோ நிலையில் ஒரு தனி மனிதன் அனுபவிக்கும் உளைச்சல்கள் பாதிக்கப்பட்ட மனிதருக்கு மட்டுமே வலியை உண்டாக்கக்கூடியவை.
இந்த உடல் மற்றும் மனவலி (Physical & psychological Distress) பிரத்யேகமானது.
பிரத்தியேகமானது மட்டுமல்லாது நாம் அன்றாம் அனுபவிக்கும் பலதரப்பட்ட உடல்வலிகளைவிட மிகக் கொடுமையானது. ஒவ்வொரு நொடியும் பாதிக்கப்பட்டவரை கசக்கிப் பிழியும் வேதனை. பாதிக்கப்பட்டவரின் மனோநிலையில் இருந்து பார்த்தால் அல்லது பார்ப்பதற்குப் படித்திருந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்ய முடியும் (சிகிச்சையளிக்க முடியும்).
இரண்டாவது வகை பைபோலார் நோய் (BPMD - type 2) அத்தகைய நோய்களில் ஒன்று.
நடத்தையில் பிரச்சனைகள் (Behaviour problems) இருந்தால் மட்டுமே சிகிச்சை கொடுக்க பெரும்பாலான இந்திய மருத்துவ கல்லூரிகளில் மனநல மருத்துவர்களேகூட பயிற்றுவிக்கப்படுகிறார்கள். காரணம் மக்கள் தொகை.
மற்ற மிதமான (மிதமானதாக தெரியும்) மனநலof ப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை கொடுக்கும் அறிவையும் அனுபவத்தையும், மனநல மருத்துவ பட்டம் பெற்று வெளியில் வந்த பிறகுதான் பெறமுடியும். அதற்கு ஆர்வத்துடன் தொடர்ந்து அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்படிப் பயிற்சியும், அனுபவமும் பெற்ற பிறகும் கூட ஒருநாளைக்கு அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து பேருக்கு மட்டுமே சிகிச்சையளிக்க முடியும்.
நம் நாட்டில் ‘பிரபல’ மனநல மருத்துவர்கள் சிலமணி நேரங்களில் எத்தனை நோயாளிகளை டிஸ்போஸ் (Dispose) செய்கிறார்கள் என்பது அவர்களை ஆலோசித்திருக்கும் அனைவருக்கும் தெரியும்.
குப்பைகளைத் தானே டிஸ்போஸ் செய்வோம்?!. ஒருமுறை உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடும் பொருட்களை ‘டிஸ்போஸபிள்’ எனச் சொல்வோம் (disposable items) அல்லவா?. மனிதர்களுக்கு ஆலோசனை தானே கொடுக்க வேண்டும்?.
நமது மக்களுக்கு என்னவொரு மனோபாவம் என்றால் வயதும், அனுபவமும், பிரபலமும், கூட்டமும் இருந்தால் ‘பெரிய டாக்டர்’ என்று நினைத்துவிடும் ‘மந்தைமனப்பான்மை’. அந்த ‘பெரிய டாக்டரிடம்’ சென்று சரியாகாத பட்சத்தில் ‘இனி எல்லாம் அவன் செயல்’ என்ற மனோநிலையில் ஆன்மீகவாதிகளிடம், ஹீலர்களிடம் சென்று வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.
இந்தப் பெரிய டாக்டர் பட்டியலில் நானும் வந்து கொண்டிருக்கும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. அது அந்த பெரிய டாக்டருக்கும் நல்லதில்லை; அவரிடம் செல்லும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லதில்லை.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அதாவது மனநோய்களுக்கு மட்டும் என்றில்லை. சர்க்கரை வியாதி, இதய நோய்கள், கேன்சர், கிட்னி ஃபெயிலியர் மற்றும் எல்லா வியாதிகளுக்கும் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் பல லட்சங்களை வாங்கிக் கொண்டு கொடுக்கும் சேவையை விட சிறந்தவொரு சேவையை நம் வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு சிறிய கிளினிக் நடத்தி வரும் மருத்துவர்கள் பெரும்பாலான நேரங்களில் தந்துவிடுவார்கள். விதிவிலக்குகளும் நிறைய இருக்கின்றன.
சரியான சிகிச்சைக் கொடுக்காமல், சரியான மருத்துவர்களைப் போய்ப் பார்க்கச் சொல்லி பரிந்துரைச் செய்யாமல், வருடக்கணக்கில் ஊறுகாய் போட்டு கொண்டு இருக்கும் அத்தகைய “சிறிய கிளினிக்” மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், தீவிரமாக ஆக்சிடென்ட் ஆகி எலும்பு முறிவு சிகிச்சை கொடுக்கப்பட வேண்டிய மனிதர்களுக்கு இது பொருந்தாது. ‘கார்ப்பரேட் மருத்துவமனைகள் பணம் பிடுங்குகிறார்கள்,” என்ற தவறான கருத்து திணிப்புகளால், ஆக்சிடென்ட் ஆகி எலும்பு அறுவைச் சிகிச்சை செய்து சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிய பல இளைஞர்கள், ‘புத்தூர் கட்டு’ மாதிரியான இடங்களுக்குச் சென்று காலம் முழுவதும் ஊனமாகிவிடும் அவல நிலைமையை அன்றாடம் பார்க்கிறேன்.
இப்படி மாட்டிக்கொள்பவர்கள் ஏழைகள் மட்டுமல்ல. பெரும் பணக்காரர்கள் சமூகத்தில் மிகப் பிரபலமாக இருப்பவர்கள் என பலரை பார்க்கிறேன்.
“ஆமாம் ஒரு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டால் கூட காசுக்காக ஆபரேஷன் செய்கிறார்கள்,” என இந்த இடத்தில் யாரேனும் நினைத்தீர்களேயானால் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுங்கள். அங்கு எலும்பு சிகிச்சை பிரிவில் என்ன பரிந்துரை செய்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். மாறாக புத்தூர் கட்டு மாதிரியான இடங்களுக்கு சென்று ஊனமாகி விடாதீர்கள்.
யாகம் வளர்த்து ஆட்சியைப் பிடிக்க அல்லது ஆட்சியை கலைக்க முடியும் என்ற நம்பிக்கை உடைய தலைவர்கள் வாழும் இந்த நாட்டில், இத்தகைய மூடநம்பிக்கைகளின் விளைவாக நடுத்தர வர்க்க மக்கள் ஊனமாகிவிடுவது பெரிய ஆச்சரியத்திற்குரிய விஷயம் இல்லை தான்.
மத்திய சென்னையில் நட்ட நடுவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து நோயாளிகளை இழுக்கும் இத்தகைய புத்தூர் கட்டு மருத்துவமனைகள் பல இருக்கத்தான் செய்கின்றன.
மிதமான மனநலப் பிரச்சனைகளுக்கு, அதாவது நான் மேலே சொன்ன பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உணரக்கூடிய மனவலியை உண்டாக்கும் மனநலப் பிரச்சனைகளுக்கு…,
அவைகளை அவர்களின் இடத்திலிருந்து உணர்ந்து(Empathy) சிகிச்சையளிக்கும் பயிற்சியையும், அனுபவத்தையும் தொடர்ந்து, படிப்பு - அனுபவம் வாயிலாக படிப்படியாக நான் வளர்த்துக்கொண்டு வருகிறேன் என்பதை சுய தம்பட்டமாகவே இந்த இடத்தில் கூறிக்கொள்கிறேன்.
மனதினால் ஏற்படும் உடல் நோய்கள் மருத்துவத்துறை (Psychosomatic Medicine) என்பது, இந்தியா மாதிரியான வளரும் நாடுகளில் இன்னமும் பரவலாக வளரவில்லை.
மனநல மருத்துவம் என்ற துறையே கூட வளராத பட்சத்தில் அதனுடைய உப துறைகளான
1. குழந்தைகள் மனநல மருத்துவம்,
2. முதியோர்கள் மனநல மருத்துவம்,
3. அடிக்சன் மெடிசின்(Addiction Medicine) எனப்படும் போதைவஸ்துகளுக்கோ, உடற்பயிற்சி, சீட்டாட்டம், வீடியோ கேம்ஸ் போன்ற நடவடிக்கைகளுக்கோ அடிமை(Behavioural Addiction)யாகி விடும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவத்துறை.
இப்படி பத்துக்கும் அதிகமான உப துறைகள் மனநல மருத்துவத்தில் இருக்கின்றன. அதில் மனதினால் ஏற்படும் உடல் நோய்கள் மருத்துவத்துறை Psychosomatic Medicine* ஒரு உப பிரிவு.
அவை எம்பிபிஎஸ் முடித்தபிறகு மூன்றாண்டுகள் மனநல மருத்துவம் படித்து, பிறகு மேலும் மூன்று ஆண்டுகள் படிக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள். குழந்தைகள் மனநல மருத்துவ படிப்பு (DM-child psychiatry) டெல்லி எய்ம்ஸ், பெங்களூர் நிம்கான்ஸ்(NIMHANS) போன்ற ஒரு சில இடங்களில் இந்தியாவில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அடிக்சன் மெடிசின் துறை ஆரம்பிக்கப்பட்டு ஆறுக்கும் மேற்பட்ட நிபுணர்கள் வெளியில் வந்து விட்டார்கள்.
நான் ஆர்வம் கொண்டிருக்கும் சைகோசோமடிக் மெடிசின் துறை சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. European Association of Psychosomatic medicine(EAPM) எனும் அமைப்பில் இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டும் தான் அங்கத்தினராக இருக்கிறேன் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன்.
*Actually Psychosomatic medicine is a branch of General medicine like cardiology; not a branch psychiatry like child psychiatry
கடந்த பத்தாண்டுகளாக வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் வருடந்தோறும் நடக்கும் மாநாடுகளில் பங்கேற்று எனது அறிவை மேம்படுத்தி வருகிறேன்.
இந்த நூலில் வரும் பெரும்பாலான கதைகளும், பிரத்யேக மனவலியை அனுபவிக்கும் மனிதர்களின் வரலாறுகளாகத்தான் இருக்கும். மேலும் இதில் வரும் சில கட்டுரைகள் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும்.
இவற்றில், சில கதைகளைப் படிக்கும்போது தங்கள் பிரச்சனையை அப்படியே பிரதிபலித்திருப்பதாகத் தோன்றலாம். என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள் தங்கள் கதையை எழுதியிருப்பதாக நினைக்கலாம். இரண்டுமே இல்லை. உண்மை என்னவென்றால், இவை அனைத்தும் உலகம் முழுக்க உள்ள மனிதர்களின் மனநல பாதிப்புகளின் மாதிரிகள் (Samples).
உளவியலும் அது சார்ந்த மருத்துவமும் (Psychology & Psychiatry)நன்கு ஆராயப்பட்டு அறிவியல் துறைகள் ஆகிவிட்டன.
எந்தவொரு மனநல பாதிப்பும் பிரத்யேகமானதன்று. அதே மாதிரியான பாதிப்பு உலகம் முழுக்க இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கு இருப்பதாகும்.
டைபாய்டு என்ற நோய் ஓர் இந்தியனுக்கு வந்தால் என்ன அறிகுறிகள் இருக்குமோ, அதேதான் அமெரிக்கனுக்கு வந்தாலும் இருக்கும். ஆனால் மனநோய்கள் கலாச்சாரம், நாகரிகம், சமூக - பொருளாதார நிலை, வயது, பாலினம் ஆகிய காரணிகளால் அவற்றின் வெளிப்பாடுகள் (Manifestations) வேறுபடும்.
மனம் ஒன்று தான் என்ற போதிலும் மார்க்கங்கள் நூற்றுக்கும் மேல் இருக்கின்றன அல்லவா?!
அதே போல மனதில் ஏற்படும் நோய்களில், ஒரே நோய் நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட விதங்களில் வெளிப்படும்.
ஆலோசனைக்காக வருபவர்களிடம் குடும்பத்தில் யாருக்கேனும் மனநல பிரச்சனை இருக்கிறதா? என கேட்கையில், அடுத்த கணமே அவர்களின் மனம் பாதுகாப்பு கேடயத்தை ஏந்தி நிற்கும். Ego defence
உடனடியாக…,
'எங்களுக்குத் தெரிஞ்சு எங்க வம்சத்லயே யாருக்கும் இல்ல,'
என்று சொல்லி விடுவதுண்டு.
ஒரு குடும்பத்தில் உடன்பிறந்த ஐந்து பேர்களில், ஒருவன் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி திருமணம் செய்து கொள்ளாமல் திருவண்ணாமலையில் அலைகிறான். மற்றொருவன் மது கஞ்சா ஆகியவற்றிற்கு அடிமையாகி பல ஆண்டுகளாக ஒரு மனநல மறுவாழ்வு மையத்தில் இருக்கிறான். இவர்களுடன் பிறந்த ஒரு சகோதரிக்கு சாமி வரும். அவள் அந்த ஏரியாவில் ஒரு புத்துக்கோயிலில் குறி சொல்லும் பிரபலமான சாமியாரினி. இந்த மூணு பேருக்கும் ஒரே நோய் தான். வெளிப்பாடுகள் தான் வேறு. ஐந்தில் மற்ற இரண்டு பேர் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
மன நோய்கள் மரபணுக்கள் ரீதியாக வரும் என்றால் இவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் ஏன் வரவில்லை? அல்லது அவர்கள் மூன்று பேருக்கு மட்டும் ஏன் விதவிதமாக வந்தது, என்பதை விளக்க தனியாக ஒரு புத்தகம் எழுத வேண்டும். எழுதுவோம்.
மனச்சோர்வு - மனபதற்றம் (Anxiety and depression) போன்றவை மூன்று வயது குழந்தைக்குக் கூட வரலாம். ஆனால் அந்தக் குழந்தைக்கு அது தற்கொலை எண்ணமாக வெளிப்பட வாய்ப்பில்லை அல்லவா?. மாறாக, “எப்போதும் அழுதுகிட்டே இருக்கான்; சரியாக சாப்ட மாட்றான்;உடல் வளர்ச்சி வயசுக்கேற்ப இல்லை,” என வெளிப்படும்.
அதுவே ஒரு 5 அல்லது 6 வயது சிறுவனுக்கு, “எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைகிறான், அதீத குறும்பு, பரபரப்பு, கவனமின்மை, துறுதுறுப்பு,” என வெளிப்படலாம்.
10 வயது பையனுக்கு “இன்னமும் தூக்கத்துல யூரின் போறான், விரல் சூப்றான், நகம் கடிக்கிறான்,” என்றெல்லாம் வெளிப்படலாம்.
12 வயது தாண்டும் போது, “முதல் மார்க் வாங்குறவன் இப்ப சில சப்ஜெக்ட்ல ஃபெயிலாயிடுறான் (Declining scholastic performance), எரிச்சலடைகிறான், அதிகம் கோபப்படுகிறான், கார்ட்டூன் சேனல்களுக்கு அடிமையாகிவிட்டான்,” என்றெல்லாம் வெளிப்படலாம்.
ஆரம்பத்திலிருந்தே சரியா படிக்க மாட்டான் (poor scholastic performance) என்பது வேறு. ஆனால், சில ஆண்டுகளாக முதல் மதிப்பெண் வாங்கி கொண்டிருந்தவன், திடீரென மதிப்பெண் ஃபெயில் ஆகுமளவுக்கு குறைகிறது என்றால் அது மனச் சோர்வு மற்றும் மனப் பதற்றத்தினால் ஏற்பட்ட கவனக் குறைவின் விளைவாக இருக்கலாம்.
பதினாறு வயதைத் தாண்டும்போது செக்ஸ் சம்பந்தமான குழப்பமாக வெளிப்படலாம். இந்தக் குழப்பத்தைத்தான் “வாலிப வயோதிக அன்பர்களே!” என நடு நிசியில் விளம்பரம் செய்து போலிகள் அந்தக் குழப்பத்தை அதிகமாக்கி அவனைத் தீவிர மனநோயாளியாக்கி விடுகின்றனர்.
இளைஞனாகும்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையாக, ஆன்மீகத் தேடலில் யோகா/தியானம் போன்றவைகளுக்கு அடிமையாகி, அறிவிருந்தும் படிப்பில் வேலையில் நிலைக்க முடியாமல், திருமணம் செய்ய முடிவு எடுக்க முடியாமல், திருமணம் மட்டுமல்லாமல் அன்றாடம் எல்லா விஷயங்களிலும் சரியா, தவறா? தவறாகப் போய்விடுமோ?, தவறாகப் போய்விட்டால் என்ன செய்வது? என எல்லாவற்றிலும் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து, கடைசியாகத் தற்கொலைச் செய்துக் கொள்ளவும் கூட வாய்ப்புள்ளது.
வயதானக் காலத்தில் தலைவலி, கேஸ் டிரபிள், முதுகுவலி, உடம்பெல்லாம் எரிச்சல், ஊரல், ஒரு பக்கமாக மரத்துப்போய்விடுதல் என்றெல்லாம் உடல் உபாதைகளாக வெளிப்படும். விளைவாக பல்வேறு துறைசார்ந்த மருத்துவர்களிடம் ஆலோசனைக்குச் சென்று (Doctor shopping), உடல் பூராவும் ஸ்கேன் ஸ்கோபி மேலும் பல பரிசோதனைகள் செய்து, அதுவரையில் சம்பாதித்த பணம்-ஓய்வூதியம் பூராவும் மருத்துவச் செலவுக்கே ஆகிவிடலாம்.
மனச்சோர்வு தீவிரமாகி மனக்குழப்பமாகும்போது மற்றவர்கள் தனக்கு கெடுதல் செய்வதாக சந்தேகம் ஏற்படும். இந்தச் சந்தேகம் ஓர் இந்தியனுக்கு செய்வினை, சூனியம், ஏவல் செய்து விட்டதாக வெளிப்படலாம். அதுவே ஓர் அமெரிக்கனுக்குச் சாட்டிலைட் மூலமாக தன் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு அம்பலப்படுத்தப்படுவதாக வெளிப்படலாம்.
“ஆம்பளையா இருந்துட்டு அழுவுறியே?” “பொம்பளையா இருந்துட்டு இப்படிச் சிரிக்கலாமா?” என்றெல்லாம் கலாச்சாரமும், பண்பாடும் நம்முள் திணித்து வைத்திருக்கிறது அல்லவா?. ஆகையினால் மனதில் பயமும் பதற்றமும் சோகமும் கஷ்டமும் வரும்போது ஆண்கள் அழுவதில்லை. மாறாக மதுவை நாடிச் சென்று விடுகிறார்கள்.
நம் நாட்டில் பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் மதுவை நாடவும், பெண்கள் சாமிகளை நாடவும் செய்கிறார்கள்.
மதுவை நாடும் பெண்களும், சாமிகளை நாடும் ஆண்களும் உண்டு தான்.
சாமியோ…? சாராயமோ…?
அவர்களின் குணக்கூறுகள் மற்றும் சமூக பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முதலில் காணும் சாத்தானிடம் மாட்டிக் கொள்வார்கள்.
ஆம்…,
சாமி அல்லது சாராயம்;ஆல்கஹால் அல்லது ஆன்மீகம்
ஆகிய இரண்டும் அந்தத் தனி மனிதனுடைய உடல்நலம் மனநலம் குடும்பநலம் மற்றும் சமூகநலம் ஆகியவற்றை பாதிக்கும் பட்சத்தில் அவைகள் சாத்தான்கள் தானே?!
டாக்டர். P. ஆனந்தன்.





Comments