கடவுளுக்கு வந்த உளைச்சலால் உருவானது இந்த பிரபஞ்சம். ஒழுங்கு பிரபஞ்ச நியதி. Order is heaven's first rule.
- மனநல மருத்துவர் ஆனந்தன்

- Dec 10, 2024
- 5 min read
ஒழுங்கு பிரபஞ்ச நியதி
Order is the canon of the Universe
Order is heaven’s first law. ஒழுங்கு என்பது சொர்க்கத்தின் முதல் விதி.
இது அலெக்சாண்டர்ப் போப் என்ற ஆங்கில கவிஞரின் மேற்கோள்.
இது ஒரு சுருக்கமான; ஆனால் ஆழமான பொருள் பொதிந்த மேற்கோள்.
“ஒழுங்குமுறை என்பது பிரபஞ்சத்தை மட்டுமல்ல, நம் வாழ்க்கையையும் சமூகத்தையும் நிர்வகிக்கும் ஒரு அடிப்படைப் பண்பு,” என்பதைக் கவிஞர் அந்த மேற்கோள் வாயிலாக அறிவுறுத்துகிறார்.
★★★★★
ஒழுங்கு என்பது சொர்க்கத்தின் முதல் விதி.
“சொர்க்கத்தில் மட்டுமல்ல; இந்தப் பூமியிலும் அதுவே விதி,” என்பது சுயமுன்னேற்றம் போதிக்கும் இன்றைய நவீனத் தத்துவவியலாளர்கள் பலரின் அறிவுறுத்தலாக இருப்பதைப் படிக்க முடிகிறது.
அருள்ளில்லார்க்கு அவ்வுலகம் இல்லைப் பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
-திருக்குறள் 247
இவ்வுலகம் என்பது பூமியில் நாம் வாழும் உலகம். அவ்வுலகம் என வள்ளுவர்ச் சொல்வது சொர்க்கமாகத்தான் இருக்கக்கூடும்.
ஒழுங்கு என்பது எல்லா இடங்களிலும் எல்லா விஷயங்களிலும் இருக்கிற, இருக்க வேண்டிய விதி.
“பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது,” என்பது விதி.
பூமி தன்னைத்தானே ஒரு முறைச் சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம் இருபத்தி நான்கு மணி நேரங்கள். ஆகையினால் தான் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.
பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் முந்நூற்று அறுபத்தைந்து நாட்கள்.
பூமியின் இந்த இயக்கம் சில மணி நேரங்கள் ஒழுங்கின்றிப் போனால், உதாரணமாக ஒரு முறைச் சுற்றி வர முப்பது மணி நேரங்களை எடுத்துக் கொண்டால்..., அல்லது சில மணி நேரங்கள் சுற்றாமல் நின்று விட்டால்…, என்னவாகும் என்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்.
ஒழுங்கு என்பதற்கான ஆங்கில சொல் ஆர்டர்(order).
ஆர்டர் இல்லாமல் இருப்பதற்குப் பெயர் ஒழுங்கின்மை(Disturbed order).
ஒழுங்கின்மை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகத் தூண்டப்படும் இடர்பாடுகளாலாலோ ஏற்படலாம்.
ஒரு ஒழுங்குடன் நடக்கும் நம் உடலின் இயக்கத்தில் இடையூறுகள் ஏற்படுகையில் நோய்கள் வருகின்றன. அதாவது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுதல். அதை ஆங்கிலத்தில் டிஸாடர் (dis-order) என்கின்றனர்.
நோய்கள் வரும் போது, அதாவது நம் உடல் இயக்கத்தில் இடையூறு வரும் போது நம் அன்றாட இலகுவான செயல்பாடுகள் கடினமாகிறது, அல்லது முற்றிலும் செயல்படமுடியாமல் போகிறது.
உடல் இயக்கத்தில் ஏற்படும் ஒழுங்கின்மை, அந்த உடலின் இலகுவான செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறது. அதை ஆங்கிலத்தில் டிஸ்ஈஸ (Disease) என்கின்றனர்.
Dis-Order leads to Dis-Ease
உலகின் அல்லது உடலின் ஒழுங்கான இயக்கத்தைச் சில இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களும், பல சிற்றிடர்களும் அவ்வப்போது பாதிக்கின்றன.
உதாரணமாகச் சுனாமி கொரோனா போன்றவை இவ்வுலகத்தின் ஒழுங்கான இயக்கத்திற்கு ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள்.
போர் ஒரு செயற்கைப் பேரிடர்.
உதாரணமாக உடலின் இயக்கத்திற்கு ஏற்படும் இடர்பாடுகளில் குழந்தைகளுக்கு வரும் சர்க்கரை நோய்(type -1 diabetes), ஆட்டிஸம் போன்றவை இயற்கைப் பேரிடர்கள்,
விபத்தில் கால் ஊனமாவது செயற்கைப் பேரிடர்.
ஆக இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பகுதியான சூரிய மண்டலத்தில், சூரியனைக் கோள்கள் சுற்றி வருவதாகட்டும் அல்லது நம் உடலில் உள்ள உறுப்புகள் இயங்குவதாகட்டும், அனைத்தும் ஒரு ஒழுங்குடன் தான் இயங்குகிறது.
உடல் ஒழுங்குடன் இயங்காவிட்டால் நோய் அல்லது ஊனம்.
உலகம் ஒழுங்குடன் இயங்காவிட்டால் பிரளயம்.
யுத்தமும் நிலநடுக்கமும் உலகின் ஒரு பகுதியில் ஏற்படுத்தும் விளைவுகள் பிரளயம்.
பேரண்டத்தின் வெடிப்பு (big bang) காரணமாக இந்தப் பிரபஞ்சம் உருவானதாக இயற்பியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கற்பனைக்கு எட்டாத பல 100 டிரில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்தக் காலத்தில் ஒரு ஒழுங்கு நிலையில் பேரண்டம் இருந்திருக்கக்கூடும்.
“அண்டத்துல இருக்குறது தான் பிண்டத்துல இருக்கு”.
அண்டம் (பரமாத்மா?) கடவுள் என்றால்; பிண்டம் என்பது இவ்வுலகில் உள்ள மண் முதல் மனிதன் வரை உயிருள்ள உயிர் இல்லாத என அனைத்துமே பிண்டம் தான்.
அந்தப் பொருளுக்கு ஜீவன் இருக்குமாயின் அது ஜீவாத்மா-வாம்(?).
பேரண்டம் வெடித்த போது ஒழுங்குநிலைக் குலைந்து பிரபஞ்சம் உருவானதாம். அதாவது ஒழுங்கு ‘நிலைகுலைந்து’ பிரபஞ்சம் உருவாகியிருக்கும் போல.
ஆக இந்தப் பிரபஞ்சமே நிலைகுலைந்து தான் இருக்கிறது.
பிரபஞ்சத்தின் குலைந்த நிலை ஒழுங்கிற்கு வர இன்னும் பல்லாயிரம் ட்ரில்லியன் ஆண்டுகள் ஆகக்கூடும்.
அப்படி ஒழுங்கிற்கு வந்த ஒரு அமைப்பு தான் இந்தச் சூரிய மண்டலம்.
சூரிய மண்டலம் பிரபஞ்சத்தின் ஒரு துகள்.
இப்போதும் கூட இந்தப் பிரபஞ்சத்தில் ஒழுங்கு நிலைக்கு வரப் பல இடங்களில் பல விஷயங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கக் கூடும்.
போராட்டங்கள்:
பேரண்ட வெடிப்பின் விளைவால் ஏற்பட்ட ஒழுங்கின்மையாகிய பிரபஞ்சத்தின் ஒரு சிறிய பகுதியில்…, சூரிய மண்டலம் உருவாக நடந்த போராட்டம்.
ஒரு நாட்டின் ஒழுங்கின்மைக்குக் காரணமாக விளங்கும் காரணிகளை எதிர்த்து நடக்கும் போராட்டம்.
ஒழுங்குடன் இயங்கி வரும் உடலினுள் ஒரு கிருமி புகுந்து ஒழுங்கைத் தடை செய்கையில் அதை எதிர்த்து உடலினுள் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் நடத்தும் போராட்டம்.
ஆக எப்படிப் பார்த்தாலும் எந்தப் போராட்டமாக இருந்தாலும்...,
“போராட்டத்தின் இலக்கு ஒழுங்கு; ஒழுங்கு பிரபஞ்சத்தின் நியதி.”
பிரபஞ்சம், ஒரு மனிதனின் உடல்..., என ஒழுங்குடன் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அது தொடர்ந்து ஒழுங்குடன் இயங்க சில நெறிமுறைகள் தேவை.
பிரபஞ்சம், சூரிய மண்டலம் ஆகிய
வை இயல்புடன், அதாவது ஒழுங்குடன் இயங்குவது பற்றிய அறிவியலின் பெயர் இயற்பியல் (இயல்புகள் பற்றிய இயல்).
உயிரிகள் என்பவைத் தாவரங்கள், விலங்குகள்.
விலங்குகளின் பரிணாம வளர்ச்சியில் இன்றைய அதிகபட்ச வளர்ச்சி மனிதன். ஆனால் மனிதன் தான் பரிணாம வளர்ச்சியின் உச்சகட்ட வளர்ச்சி என்று சொல்ல முடியாது.
இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு குறித்து எலான் மஸ்க் போன்றவர்கள் பயப்படுவதற்குக் காரணம், மனிதனை ஆட்டிப்படைக்கும் வேறொரு விஷயம் வரக்கூடும். எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ மனிதக் குலத்தை ஆட்டிப்படைப்பது போல.
தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகிய உயிரிகள் பற்றிய அறிவியலின் பெயர் உயிரியல். உளவியல் என்ற பதம் மனதின் இயல்புகள் பற்றிய அறிவியலைக் குறிக்கும்.
“மனம் என்பது மூளையின் இயக்கமேயன்றி வேறொன்றுமில்லை”,
என்பது இன்றைய அறிவியல்.
மயக்க ஊசி போட்டால் மனதின் இயக்கம் நின்று விடுகிறது எனும்போது, அந்த ஊசி மூளையில் சென்று தான் வேலைச் செய்கிறது எனும்போது; மனம் முளையின் வேலை என்பதற்கு வேறு சான்றுகள் எதற்கு?.
ஆக உளவியல் என்பது உடலியலின் ஒரு பகுதிதான்.
“மயக்க ஊசி போட்டதும் மனதின் இயக்கம் நின்று விடுவதில்லையே?, தூக்கம் தானே வருகிறது?, தூக்கத்தில் கனவுகள் வருகிறதே?, அப்படியென்றால் தூங்கும் போதும் மனம் வேலைச் செய்வதாக தானே அர்த்தம்?,” ஆகிய கேள்விகள் மற்றும் பரமாத்மா ஜீவாத்மா பற்றிய விவாதங்கள் என அடுத்தடுத்து யோசித்தால் அது ஒரு கட்டத்தில் மூளையின் ஒழுங்கான இயக்கத்தைக் குலைக்கும். தமிழில் வட்டார வழக்கில் சொல்வதென்றால் பைத்தியம் பிடிக்கும்.
ஆகையினால், இந்தப் புத்தகத்தில் அடுத்தடுத்து ஒரு மனிதனின் உடல் ஒழுங்குடன் இயங்குவது பற்றிய உடலியல் பற்றி மட்டும் பேசுவோம்.
ஒரு மனிதனின் உடலும், அதன் ஒரு அங்கமாகிய உள்ளமும் ஒழுங்குடன் இயங்கி இலகுவாக முடிய தேவையான முக்கியமான ஒரு நெறி ஒழுக்கம்.
ஒழுங்கு பிரபஞ்ச நியதி. அந்த நியதி ஒரு தனி மனிதனின் நடவடிக்கைகள் முதல் நாட்டை நிர்வகிக்கும் ஆட்சிமுறை வரை அனைத்திற்கும் பொருந்தும்.
சூரிய மண்டலத்தில் கோள்கள் ஒழுங்குடன் சுற்றவில்லை என்றால் விளைவுகள் என்னவாகும் என்பது கற்பனைக்கு எட்டாத ஒரு விஷயம்.
ஏற்கனவே சொன்ன உதாரணம் தான்.
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரங்கள் ஆகும் என்ற நியதி தடுமாறி ஒரு நாள் மட்டும் முப்பது மணி நேரம் எடுத்துக் கொண்டால் விளைவுகள் என்னவாகும் என்று நினைத்துப் பார்ப்போம்.
நிமிடத்திற்கு 60 முதல் 90க்குள் துடிக்க வேண்டிய இதயம் மிக அதிகமாகவோ மிகக் குறைவாகவோ துடித்தால் விளைவுகள் என்னவாகும்.
விலங்கினத்தின் பரிணாம வளர்ச்சியின் இன்றைய உச்சபட்ச நிலை மனிதன். மனிதனின் இயல்பு நிலை மனிதம் என்ற பதத்தினால் அழைக்கப்படுகிறது.
மனிதம் என்ற பண்பு பல மில்லியன் ஆண்டுகள் போராடியதன் விளைவால் ஏற்பட்ட ஒரு ஒழுங்கு. ஆகையினால் போராளிகள் என்ற பெயரில் தற்கொலைப் படையாக மாறி தானும் அழிந்து மனிதக் குலத்தையும் அளிப்பவர்கள் பல மில்லியன் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் விலங்குகள் தான்.
1959-ல் காந்தியின் கல்லறைக்கு வந்த மார்ட்டின் லூதர்க் கிங் ஜூனியர் அஹிம்சையைத் தவிர மற்ற அனைத்து வகைப் போராட்ங்களும் Primitive என்று குறிப்பிட்டார். Primates என்ற சொல் விலங்குகளைக் குறிக்கும். விலங்குகள் கூட ஒரே இனத்திற்குள் சண்டையிட்டு அழித்துக் கொள்வதில்லை
விலங்குகளை விட குறைவான அறிவு கொண்ட ஜீவன்கள் நடத்தும் போராட்டங்களுக்கு உதாரணங்கள் தான் மதத்தைக் காக்க, கொள்கையைக் காக்க தற்கொலைப் படையினனாக மாறுவது.
வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை
வீரத்தின் உச்சகட்டம் அகிம்சை எனக் கமல்ஹாசன் சொல்வதும் இதைத்தான்.
ஆறாவது அறிவு என்று அழைக்கப்படும் மனிதம், இந்தப் பூமி பந்தில் ஆங்காங்கே வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் ஒரு ஒழுங்கைக் கட்டமைத்துக் கொள்ள உதவியது.
ஒழுக்கம் என்பது தன்மை.
ஒழுங்கு என்பது அமைப்பு மற்றும் இயக்கம்.
இன்று நமக்குப் பூமி பந்தின் பரப்பளவு குறித்து தெரிய வந்துள்ளது. அதை அறியாமல் இன்றும் கூட மனிதக் குழுக்கள் இந்தப் பூமி பந்தில் ஆங்காங்கே வாழ்கின்றனர். பழங்குடிகள் என்று அவர்களை அழைக்கிறோம்.
நம் அந்தமான் தீவை ஒட்டிய வனப் பகுதியில் கூட அத்தகைய மனித இனக் குழுக்கள் வாழ்வதாகச் சொல்கிறார்கள். அதேபோல பல இடங்களில் பல மனித இனக் குழுக்கள் வாழக்கூடும்.
அந்த இனக்குழுக்கள் ஒரு ஒழுங்குடன் தான் இயங்கிக் கொண்டிருப்பார்கள். அவைகளில் ஏதேனும் ஒரு இனக் குழுவில் இன்றும் கூட தாயும் மகனும் உடலுறவு கொள்வது என்பது அந்த இனம் பெருக அவர்களுக்குள் வகுக்கப்பட்ட ஒழுங்காக இருக்கக்கூடும்.
அதே இனக் குழுவில், “சகோதர சகோதரிகளின் பிள்ளைகளுக்குள் உடலுறவு கொள்வது ஒழுக்கம் மீறிய செயல்,” என்ற ஒழுங்கு வகுக்கப்பட்டிருக்கக் கூடும்.
அந்த இனக் குழுவின் தலைவன் அந்த ஒழுங்கு குலையாமல் இருப்பதற்குப் பொருப்பானவன். அந்த ஒழுங்கு குலையும் பட்சத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் அடுத்தடுத்து அத்தகைய நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்கும்.
உதாரணமாக அந்த இனக்குழுவில் சகோதர சகோதரிகளின் பிள்ளைகள் தங்களுக்குள் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் தண்டனைக் கிடைக்கும்.
உதாரணமாக மாமா மகனை, அத்தை மகளைத் திருமணம் செய்து கொள்வது என வைத்துக் கொள்வோம். இவைகளுக்கு அக்குழுவில் தண்டனை.
தண்டனை அவர்கள் வகுத்த ஒழுங்கு நடவடிக்கைகள் படி இருக்கும். தூக்கில் போடுவதாக, ஒரு கையை மட்டும் வெட்டி எடுத்து விடுவதாக அல்லது கல்லால் அடித்து கொல்வதாக இருக்கலாம்.
தூக்கில் இட்டு அந்த இனத்தில் இருந்து ஒருவரை அழிப்பது எதற்கு?. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள அவளின் தாயுடன் பிறந்த சகோதரர்களின் ஆண் பிள்ளைகள் ஐந்து பேர்ப் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்குள் அடித்துக் கொண்டு இறந்து போனால் என்னவாகும்?. இனம் கொத்து கொத்தாக அழிய நேர்ந்து ஒரு கட்டத்தில் அந்த இனமே இல்லாமல் போகும் வாய்ப்புகள் உள்ளது அல்லவா?.
வகுக்கப்பட்ட ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்தால் தான் அந்த இனம் பெருகும். இல்லையெனில் அழிந்து விடும்.
தகுதியுள்ளவைத் தப்பி பிழைக்கும்; Survival of the fittest. என்பது இதுதான்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
-வள்ளுவர்
உயிரை விட உயர்ந்ததாகக் காக்கப்பட வேண்டிய பண்பு ஒழுக்கம் என்கிறார் வள்ளுவர்.
காரணம் ஒருவேளை ஒழுக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு ஓர் உயிர் அழியுமேயாயின்; அந்த ஒழுக்கம் நிலைநிறுத்த படுவதால் பல்லாயிரம் உயிர்கள் இந்தப் பூமிப் பந்தில் நிலைத்திருக்க உதவக்கூடும், என்பதை மனதில் வைத்தே திருவள்ளுவர் அப்படிச் சொல்கிறார்.
ஒழுங்கில்லாத ஒழுக்கம்
ஒழுக்கமில்லாத ஒழுங்கு.
ஒழுக்கமான ஒருவரின் வாழ்க்கை ஒழுங்கின்றி இருந்தால் இலக்கை அடைய முடியாது. உதாரணமாக இலக்கியவாதிகள், திரைப்பட இயக்குனர்கள், ஒழுக்கமும் உயர்ந்த பண்புகளும் அபரீதமான அறிவும் இருந்தபோதிலும் இடையிலேயே காணாமல் போவதற்குக் காரணம் அவர்களின் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை.
அவர்களின் ஒழுங்கற்ற வாழ்க்கை முறைக்கு முக்கிய காரணம் மூளைச் செல்களின் ஒழுங்கற்ற செயல்பாடுகள்.
ஒழுக்கமில்லாத ஒழுங்கு சடங்கு.
ஒழுக்கம் இல்லாத ஒருவரை ஒழுங்குடன் இருக்க வைக்க முடிந்தால் அவருடைய ஒழுக்கமின்மை மற்றவர்களைப் பாதிக்காது. இதைச் செய்வதற்கு சட்டங்கள் தேவை. அல்லது இயற்கையான சாமி பயம், செயற்கையாகத் தண்டனை பயம்.
ஒழுக்கமான ஒருவர், ஒழுங்கிற்கு வரத் தேவையான பண்புகள் நிலைத்திருத்தல் Persistence. நிலைத்திருத்தலுக்குத் தடையாக இருப்பவைகளை எதிர்த்தல் Resistance.
எதிர்த்து நிலைத்திருத்தல்.
கடவுளுக்கு ஏற்பட்ட உளைச்சலின் விளைவாக உருவானது பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தின் ஒரு துகள் சூரிய மண்டலம்.
சூரிய மண்டலத்தின் ஒரு துகளாகிய பூமிக்கு உளைச்சல் வரும் போது நில நடுக்கங்களும் சுனாமிகளும் ஏற்படுகின்றன.
தனிமனிதனின் மூளைக்குள் உளைச்சல் வரும்போது, அவனும் அவனைச் சார்ந்த மனிதர்களும் பாதிப்படைகிறார்கள்.
அந்தத் தனி மனிதன் தலைவனாக இருந்தால் அந்தச் சமூகமே பாதிப்படைகிறது.
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் இன்றைய தமிழ்நாட்டின் நிலைக்கு அத்தகைய தலைவர்களே காரணமாக இருக்கிறார்கள்.
இந்த இடத்தில் அமெரிக்காவையும் மத்திய அரசையும் காரணம் காட்ட உங்கள் மூளைச் செல்கள் முயற்சித்தால், இந்தக் கட்டுரையைப் பல நூறு தடவைப் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
December 2024
Psychiatrist Anandhan





Comments